Saturday, October 22, 2005

தமிழ்மணமும் ...

தமிழ்மணத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளை விலக்கியது சரியானதா என்று பலர் தத்தம் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். சில கருத்துக்களை சக வலைப்பதிவருடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதன் விளைவே இப்பதிவு!

1. ஒருவர் தன் பதிவில் முன் வைக்கும் கருத்துக்களுக்கு, சிலருக்கோ / பலருக்கோ மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். அவற்றை, நாகரீகமான வகையில், சம்மந்தப்பட்ட பதிவின் பின்னூட்டக் களத்திலோ அல்லது தனிப்பதிவாகவோ இட மற்றவருக்கு நிச்சயம் உரிமை உண்டு. ஆனால், ஒருவரைப் பற்றிய இரங்கல் பதிவையும், அதில் இடப்பட்ட பின்னூட்டங்களையும் பகடி செய்வது சரியான செயலாகத் தோன்றவில்லை. மதி தமிழ்மணத்திற்கு செய்து வரும் சேவை மற்றும் அவரது எழுத்துக்களை முன் வைத்து அவருக்கென்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அதனால் அவரது பதிவுகள் அதிக அளவில் வாசிக்கப்பட்டும், பின்னூட்டங்கள் பெற்றும் வருகின்றன. இதில் பகடி செய்வதற்கு என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை!

2. சில சமயங்களில், பகடியை மாற்றுக் கருத்துக்களை வெளியிட ஒரு ஆரோக்கியமான வழியாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதைப் பலரும் ரசிக்கவே செய்கின்றனர். அதே நேரத்தில், வலைப்பதிவுக் களத்தை பிறரை பகடி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவது, பல நேரங்களில் காழ்ப்பை வளர்ப்பதற்கு மட்டுமே அடி கோலுவதாய் அமைந்து விடுகிறது.

3. காசி தமிழ்மணச் சேவையின் முதலாண்டு நிறைவின் போது இட்ட பதிவிலேயே மதத்துவேஷம் மற்றும் இன்னபிற விரும்பத்தகாத விடயங்களைத் தாங்கி வரும் பதிவுகளை விலக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறியிருந்தார். அந்த நிலைக்குத் தன்னை தள்ள வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனால், தொடர்ந்து அவ்வாறே எழுதி வருபவர்கள் தங்கள் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படக் கூடிய சாத்தியம் இருந்ததை உணர்ந்திருக்க வேண்டும்.

4. பலருக்கு, பணி, குடும்பம் ஆகியவற்றுக்கே நேரம் போதாமல் இருக்கும் சூழலில், தனியொரு மனிதனாக, தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைக்க தமிழ்மணத்தை உருவாக்கிய காசியின் சேவை மனப்பாங்கையும், உழைப்பையும் மனதில் கொண்டாவது, இம்மாதிரி பொதுவில் அவருக்கு கசையடிகள் வழங்குவதை தவிர்க்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து! "நாங்கள் என்ன, தமிழ்மணத்தை உருவாக்க பொருளுதவி கேட்டிருந்தால் தந்திருக்க மாட்டோமா?" என்று வினாவெழுப்புவது சற்றும் சரியல்ல! பொருளுதவி கொடுத்தாலும், ஒருவர் அதில் முனைய வேண்டாமா ?

5. தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட வலைப்பதிவுகளுக்குச் சொந்தக்காரர்கள், விடயத்தை பொதுவில் வைப்பதற்கு முன், தனிப்பட்ட முறையில் காசியை அணுகி, காரணங்களைக் கேட்டு, சர்ச்சைக்குரிய பதிவுகளை தாமாகவே நீக்க முன் வந்திருந்தால், பிரச்சினையை சுமுகமான முடிவுக்கு எடுத்து வந்திருக்கக் கூடிய சாத்தியம் இருந்ததாகவேத் தோன்றுகிறது. ஒரு விதயத்தை ஊதிப் பெரிதாக்குவது என்பது இங்கு நடைமுறையாகவே இருந்து வருகிறது!

6. இதைத் தணிக்கை என்று எண்ணுவதை விட, சக வலைப்பதிவரின் மனம் புண்படும்படியும், தேவையற்ற சர்ச்சையை வளர்க்கும் வகையிலும் எழுதாமல் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாக நினைத்தால், அனைவருக்கும் நல்லது. முக்கியமாக, சின்னவன், இணையக்குசும்பன் பதிவுகள் நீக்கப்பட வேண்டிய சூழல் உருவானது குறித்து இங்கே யாருக்கும் மகிழ்ச்சி இல்லை!!! பதிவுகள் விலக்கப்பட வேண்டிய காரணங்களை ஆராயும் வழிவகைகள் குறித்து என் கருத்துக்களை முன் வைப்பதை, தற்போதைய சூழலில், தவிர்க்கிறேன்!

7. இறுதியாக, தமிழ்மணம் வாயிலாகத் தான், பல சாதாரணர்களின் (என்னையும் சேர்த்து) பதிவுகள் கவனிக்கப் படுகின்றன, வாசிக்கப் படுகின்றன என்பதை பலரும் ஒப்புக் கொள்வர். ஏன், தமிழ்மணம் மூலமாகத் தான் கௌசல்யா என்ற ஏழை மாணவியின் கல்விக்கு (சக வலைப்பதிவரின் ஆதரவோடு) உதவ வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தின் முதல் கட்டம் நிறைவேறியது!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, October 12, 2005

சென்னைப் பெருமழையும் நெகிழ்ச்சியானதொரு சந்திப்பும்

எனது பிரமிக்க வைக்கும் கௌசல்யா பதிவின் இறுதியில் வைக்கப்பட்டிருந்த (கௌசல்யாவின் மருத்துவக்கல்வி உதவிக்கான) கோரிக்கையைத் தொடர்ந்து பல வலைப்பதிவு நண்பர்கள் பணவுதவி செய்தனர். கிட்டத்தட்ட 30,000க்கு மேலான ஒரு தொகை திரண்டது. அதிலிருந்து ரூபாய் இருபத்தைந்து ஆயிரத்தை கௌசல்யாவிடம் சேர்ப்பிக்கவும், மீதித் தொகையை மற்றொரு ஏழை மாணவிக்குத் தரவும் நண்பர்களின் ஒப்புதலுடன் முடிவெடுக்கப்பட்டது.

கௌசல்யா குறித்து முதலில் செய்தி வெளியிட்ட DECCAN CHRONICLE(DC) அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, அந்த நாளிதழின் Chief of News Bureau, பகவன் சிங் அவர்களிடம் கௌசல்யாவை சந்தித்துப் பேசவும், திரட்டியத் தொகையை வழங்கவும் ஏற்பாடு செய்யுமாறு விண்ணப்பித்தேன். சற்று நீண்ட காத்திருப்பிற்குப் பின் பகவன் அவர்கள் அந்தச் சந்திப்பை இன்று மதியம் 3 மணி அளவில் ஏற்பாடு செய்திருந்தார். சரியான மழை நாளில் அது அமைந்து விட்டது! திரு.டோண்டு ராகவனையும், ரஜினி ராம்கியையும் DC அலுவலக சந்திப்புக்கு வருமாறு அழைத்திருந்தேன்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது ஓரளவு மழை பெய்து கொண்டிருந்தது. என் மனைவிக்கு நங்கநல்லூர் செல்ல வேண்டிய வேலை இருந்ததால், கால் டேக்ஸி எடுத்துக் கொண்டு, போகும் வழியில் கத்திப்பாரா சந்திப்பில் என்னை இறக்கி விட்டுப் போகுமாறு கூறினேன். கத்திப்பாராவை நெருங்கும்போது வானம் மடை திறந்தாற் போல் மழை பெய்யத் தொடங்கியது! ஒழுங்கு மரியாதையாக DC அலுவலக வாசலில் இறங்கிக் கொள்ளாமல், "நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கிளம்பு!" என்று (DC அலுவலகம் அருகில் இருப்பதாக எண்ணிக் கொண்டு) மனைவியிடம் ஜவடாலாகக் கூறிவிட்டு கத்திப்பாராவில் இறங்கி விட்டேன்!

நூறடி சாலையில் மழைக்கு ஒதுங்கக் கூட இடமில்லாமல், சுமார் ஒன்றரை கி.மீ நடந்து DC அலுவலகம் போய்ச் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது! அதுவும் DC அலுவலகம் அமைந்த தெரு, முழுதும் சேறும் சகதியுமாக இருந்தது! அலுவலகம் உள்ளே சென்றவுடன், உள்ளுக்கும் வெளிக்கும் ஆன சூழல்களில் இருந்த வித்தியாசம், முகத்தில் அறைந்து வரவேற்றது!!! அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கட்டடம் அது!

பகவன் சிங் அவர்களின் அறையில் அவருக்காகக் காத்திருந்தபோது டோண்டு ராகவன் வந்து சேர்ந்தார். ராம்கியால் வர இயலவில்லை. பகவன் சிறிது நேரத்தில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மனிதர் மிக எளிமையாகவும், நட்பு பாராட்டுபவராகவும் இருந்தார். அவர் பெயர் வடக்கத்தித்தனமாக இருந்தாலும் பகவன் நல்ல தமிழில் பேசியது மனநிறைவாக இருந்தது. மழை காரணமாக கௌசல்யா வந்து சேர சற்று தாமதம் ஆனது. நானும், ராகவனும், பகவன் அவர்களும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

தமிழ் வலைப்பதிவுகள், தமிழில் பதிக்கத் தேவையான மென்பொருட்கள், தமிழ்மணம் சேவை ஆகியவை குறித்து பகவன் அவர்களிடம் எடுத்துக் கூறினோம். அவற்றை பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அவருக்கு, தமிழ்மணம் வெப்சைட்டை அவரது கணினியில் திறந்து காண்பித்தேன். பகவன் தன் கீழே பணி புரியும் பத்திரிகையாளர் ஒருவரை அழைத்து தமிழ் வலைப்பதிவுகள் குறித்து கட்டுரை ஒன்றை தயாரித்து DCயில் வெளியிட ஆவன செய்யுமாறு கூறினார்! அதற்கு வேண்டிய உதவி செய்யுமாறு எங்களையும் கேட்டுக் கொண்டார்.

தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கூறியபடி, நாங்கள் பேசுவதையும் செவிமடுத்தபடி, கணினியில் ஒரு கட்டுரையை தட்டச்சும் செயதபடி, சக பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியபடி, (இவற்றுக்கு இடையில் எங்களுக்கு காபி வரவழைத்துத் தந்து!) பகவன் சிங் இயங்கியதைக் காண சற்று பிரமிப்பாகவே இருந்தது!!!

ஒரு வழியாக கௌசல்யா DC அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அவரை சந்தித்து நானும் ராகவனும் பேசினோம். First Impression is always the Best Impression என்பதற்கு ஏற்றாற் போல நற்குணமும் கல்வியார்வமும் மிக்கவராக கௌசல்யா தோற்றமளித்தார்! 12-வது வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல் (199/200) தவிர கணிதம், வேதியியல், உயிரியல் பாடங்களில் 200/200 வாங்கிய, பொது நுழைவுத் தேர்வில் 98.33% பெற்ற, தாய் தந்தையற்ற அப்பெண்ணுக்கு, நமது தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் உதவ முடிந்தது குறித்து மிகுந்த மனநிறைவு எனக்கு! அத்தகைய மதிப்பெண்கள் பெற எத்தகைய அசாதாரண உழைப்பு தேவை என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

ஒரு வருடத்திற்கு படிப்பு மற்றும் இதரச் செலவுகளுக்கு சுமார் 40000/- தேவையிருப்பதாகக் கௌசல்யா கூறினார். ரூபாய் 25000-க்கான காசோலையை அவரிடம் கொடுத்து, அடுத்த வருடமும் அவரது படிப்புக்கு இயன்ற அளவு உதவி செய்ய முயற்சிப்பதாகக் கூறி விடை பெற்றோம். DC பத்திரிகை சார்பிலும் கௌசல்யாவுக்கு உதவி அளிக்கப்படுவதாக அறிந்தேன்.

பின்னர், DC அலுவலக வாசலிலிருந்து நூறடி சாலை வரை தேங்கியிருந்த குட்டையில் (செருப்பை கையில் பிடித்துக் கொண்டு!) நீந்தியபடி நானும் ராகவனும் ஒரு வழியாக கிண்டியை அடைந்தோம்! மழை பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது! சொட்ட சொட்ட மழையில் நனைவது கூட, உள்ளம் நிறைவாக இருக்கும்போது, மிகுந்த ஆனந்தமாகவே உள்ளது!!!

உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருக்கு (இயன்ற அளவில்) உதவலாம் என்பது என் எண்ணம். அதற்கு உங்கள் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails